தமிழக மக்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு

 தமிழகத்தின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்க,  ஈரோடு மாநாட்டிற்கு திரண்டு வாருங்கள் என தமிழக மக்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

          இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட இயக்கத்தின் தொட்டில் பூமியாம் ஈரோட்டில் வரும் 15-ந்தேதி மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். நூற்றாண்டைக் கடந்திருக்கின்ற திராவிட இயக்கத்தின் மீது சிலர் வன்மத்தை வாரி வீசி வரும் காலகட்டத்தில், திராவிட இயக்க இலட்சியக் கோட்பாடுகள் நீர்த்துப் போய்விடவில்லை என்பதை புரிய வைக்கப் போகும் மாநாடுதான் ஈரோட்டில் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.

        இந்தியத் துணைக் கண்டத்திற்கு சமூக நீதியின் வெளிச்சம் பாய்ச்சியது திராவிட இயக்கம்தான் எனவும், சமத்துவ சமூகம்,  ஆரிய கலாச்சாரத் திணிப்பிற்கு எதிர்ப்பு, பெண்ணடிமைத்தனத்திற்கு முடிவு ,  டெல்லி ஆதிக்கத்திலிருந்து அரசியல், பொருளாதார விடுதலை ஆகியவற்றிற்கு களம் கண்டு வெற்றிச் சரிதம் படைத்ததும் திராவிட இயக்கம்தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

       அண்ணா 1967 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 50 ஆண்டு காலம் திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டில் கோலோச்சுவதாகவும், அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக, உயர் கல்வித் துறையில் வியத்தகு முன்னேற்றங்கள் கண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு ஐம்பது ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சிதான் காரணம் என அவர் கூறியுள்ளார்.

       அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என மாநிலங்களவையில் அண்ணா வலியுறுத்தியதையும், அவரது வழியில் ஆட்சி நடத்திய கருணாநிதி, மாநில சுயாட்சி தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மாநிலங்களின் உரிமைக் கொடியை உயர்த்தியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்துத்துவக் கொள்கையை எதிர்ப்போரை தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தும் ‘ஹிட்லரிசம்’ போன்ற நடவடிக்கைகளும் அதிகரித்துவிட்டதாகவும், இந்து ராஷ்டிரா’ அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கூட்டம் கூப்பாடு போடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நுழைய முடியாத திராவிட கோட்டையாகத் திகழும் தமிழ்நாட்டில், காவிக் கொடியை ஏற்றத் துடிக்கிறார்கள் எனவும தமிழகத்தின் உயிராதாரமான பிரச்சினைகளில் துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க. அரசுக்கு அதிமுக அரசும் துணை போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

       இந்தச் சூழலில் தமிழகத்தின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்க போகிற மதிமுகவின் முப்பெரும் விழா மாநில மாநாட்டுக்கு தமிழக மக்களே அணி திரண்டு வாரீர் என அந்த அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்

Related Posts