தமிழர்களின் வீரக்கலைகளை போற்றி வளர்த்தவர் சி.பா. ஆதித்தனார்

தமிழர்களின் வீரக்கலைகளை போற்றி வளர்த்தவர் சி.பா. ஆதித்தனார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை எழுப்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று அயர்லாந்து நாட்டின் சிம்பன் இயக்கத்தை உள்வாங்கி,நாம் தமிழர் இயக்கத்தை சி,பா.ஆதித்தனார் தொடங்கினார் எனவும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்து 1958 ஆம் ஆண்டு மன்னார்குடியில் மாநாடு நடத்தியதாகவும் கூறினார். அந்த மாநாட்டை பெரியார் தொடங்கி வைத்து பேசியபோது தமிழர்களுக்கு தனி நாடு அமைப்பதில் ஆதித்தனார் முன்நிற்பதாகவும் அவருக்கு பக்கபலமாக துணைநிற்பேன் என பேசியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். வாழ் நாளெல்லாம் தமிழர்களுக்காகவே வாழ்ந்த பெருமகனார், ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரத் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று முதன்முதலாக அந்த விதையை ஊன்றியவ்ர் சி.பா ஆதித்தனார் என வைகோ தெரிவித்தார்.

1967 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தலைவராக சி.பா. ஆதித்தனார் பொறுப்பேற்றபோது  முதன் முதலாக திருக்குறளை வாசித்து அவையைத் தொடங்கி வைத்தபோது தமிழ்த் தாயே இங்கு வந்து பாடம் நடத்தியதைப் போல் இருக்கிறது என அண்ணா பாராட்டியதை அவர் சுட்டிக்காட்டினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியின் அமைச்சரவையில் கூட்டுறவு அமைச்சராக பொறுப்பேற்ற சி.பா. ஆதித்தனார் கோடிஸ்வரர்களுக்கு மட்டுமே என இருந்த கூட்டுறவுத்துறையை சாமானிய மக்களின் துறையாக்கியவர் ஆதித்தனார் என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தனது திருமணத்திற்கு ஆதித்தனார் தலைமை தாங்கியதை நினைவு கூர்ந்துள்ள வைகோ, தன்மேல் அன்பும் பற்றும் கொண்டவர் எனவும்  அவர் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும் எனவும்  கூறினார்.

முன்னதாக, தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், வி.ஜி.சந்தோஷம், என்.ஆர்.தனபாலன், காசிமுத்து மாணிக்கம், சிம்லா முத்துசோழன், எர்ணாவூர் நாராயணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் ஆகியோர் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Posts