சிறப்பு கட்டுரை

தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்குமா?

இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்ததோடு அதன் முடிவுகளும் வெளியாகி விட்டன. இதில் எது நடக்ககூடாது என்று தமிழர்கள் நினைத்தார்களோ அதுவே தற்போது நடந்துள்ளது. ஆம்! தமிழர்களுக்கு எதிராக செயல்படக்கூடிய கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று இலங்கையின் 7வது அதிபராக பதவியேற்றுள்ளார். முன்னாள் அதிபர் மஹிந்த ரஜபக்சவின் தம்பியும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான கோத்தபய ராஜபக்ச, 2009 ஆம் ஆண்டு நடந்த போரின்போது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்புவகித்துள்ளார். தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 52.25 விழுக்காடு வாக்குகள் பெற்று கோத்தபய வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச 41.99 விழுக்காடு பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.

இந்த நிலையில் கோத்தபய அதிபராக வெற்றி பெற்றது குறித்து மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள், மனதுக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகின்ற நாளாக அமைந்துவிட்டது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, 90 ஆயிரம் விதவைகளைக் கண்ணீரில் தவிக்க விட்டு, எண்ணற்ற இளம் பெண்களை நாசப்படுத்தி, பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் என்றும் பாராமல் இனப்படுகொலை செய்து, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்கே சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலைக்குக் காரணம் மகிந்த ராஜபக்ச என்று சொன்னால், முழுக்க முழுக்க அதை இயக்கியது ராணுவ அமைச்சராக இருந்த கோத்தபய ராஜபக்ச” தான் என்று கூறியுள்ளார். மேலும் சிங்கள வெறியர்கள் மத்தியில், வெறித்தனத்தை ஊட்டி வருகின்ற கோத்தபய ராஜபக்ச கூட்டம் வெற்றி பெற்றிருப்பது மிகவும் கவலை அளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்ச இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தி அதில் பல லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர் தான் இவர். அதுமட்டுமின்றி ஈழப் போரின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த, தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையில் பரபரப்பாக பேசப்படும் வெள்ளை நிற வேனில் பலர் கடத்தப்பட்டதிலும் கோத்தபய ராஜபக்சவிற்கு தொடர்பிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச நீதிக்கான அமைப்பு சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இவ்வாறாக பல சர்ச்சைகளிலும் தமிழீழ எதிர்ப்பு கொள்கை கொண்டவராகவும் காணப்படும் கோத்தபய, அதிபராகியுள்ளது உலக தமிழர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பல பிரச்சினைகள் வரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இருவருக்கும் கிடைத்துள்ள வாக்குகளை அடிப்படையாக வைத்து பார்ப்பதை விட, எந்த பகுதியில் யாருக்கு அதிகமாக கிடைத்துள்ளது என்பதை தான் இங்கு அவசியமாக பார்க்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிவைப் பொறுத்தவரையில் தமிழக மக்களும் இஸ்லாமியர்களும் அதிகளவில் வசிக்கும், வட இலங்கைப் பகுதிகளில் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அந்த பகுதிகளில் கோத்தபயவுக்கு வெறும் 5 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், அதற்கு நேர் எதிராக சிங்களர்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் கோத்தபய ராஜபக்ச அதிக வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வாக்குகளே அவர் வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளது. அதனை அவரே அதிபராக பதவியேற்ற பின் ஆற்றிய முதல் உரையில் தெரிவித்துள்ளார். “தமிழர்களின் வாக்குகளையும் தான் எதிர்பார்த்த போதிலும், தான் எதிர்பார்த்தளவு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறியுள்ளார். இனிவரும் காலங்களிலாவது தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்”. வெளிப்படையாகவே அவர் இவ்வாறு பேசியிருப்பது தமிழர்களை ஒடுக்கும் மனநிலையா? அல்லது அரவணைக்கும் மனநிலையா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் இவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை உடனடியாக கணிக்க முடியாது.

இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலை தனது பிரசாரத்தில் அதிகமாக குறிப்பிட்டார் கோத்தபய. இதனால் இவர் நாட்டின் பாதுகாப்பை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டதோடு,  தான் ஆட்சிக்கு வந்தால் 2009 ஆம் ஆண்டு போர் பற்றிய ஐ.நா விசாரணைகளில் ராணுவத்தினர் தண்டிக்கப்படுவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டு போரை நினைவில் வைத்து கோத்தபயவை அதிபராக பார்க்க விரும்பாத தமிழக மக்கள், சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர். இதனை எதிர்பார்த்த கோத்தபய தமிழர்களின் எதிர்ப்பு மனநிலையை சிங்களர்களிடம் விதைத்து, அதன் மூலம் அவர்களுடைய வாக்குகளையே தனது வெற்றிக்காக பயன்படுத்திக் கொண்டார். எனவே இது இலங்கையில் இனரீதியான பிரிவினையை இன்னும் அதிகப்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கினறனர். தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பான சூழல் நிலவுவதில் சிக்கல் இருப்பதாக தமிழக அரசியல் தலைவர்களும் கூறியுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை நடந்த இலங்கை அதிபர் தேர்தல், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இவையனைத்தையும் மீறி அங்கு முழுமையான அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Show More

Related News

Back to top button
Close