தமிழிசை சவுந்தரராஜனுக்கு மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி எச்சரிக்கை

அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாத வைகோவை மிரட்டுவதற்கான துணிச்சல் இந்த உலகத்தில் யாருக்கும் இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை : ஏப்ரல்-23

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து 22 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் போராடி வருவதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாடே அறியும்.

1996 இல் வைகோ தொடர்ந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு 1997 இல் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் வைகோ அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வாதாடிய போதுதான், அப்போதைய தலைமை நீதிபதி மன்மோகன்சிங் லிபரான் அவர்கள் வைகோவைப் பார்த்து, “உங்கள் நேர்மையை நாடு அறியும்; எவரும் சான்றளிக்கத் தேவை இல்லை” என்று கூறியது மறக்க முடியாதது.

பின்னர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்தபோது, அந்த வழக்கில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ 32 முறை நேர்நின்று தாமே வாதாடினார். தமிழக அரசும், மாநில சுற்றுச் சூழல் துறையும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதில் துளியும் அக்கறை இன்றி, ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டதால், உச்சநீதின்றம் 2013 ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட் ஆலை தொடந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என்பதை எவரும் மறைக்க முடியாது.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வாறெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதை உச்சநீதிமன்றத்தில் வைகோ அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைத்ததால்தான், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் ரூ.100 கோடியை அபராதமாகச் செலுத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் பற்றிய செய்தி வெளியானவுடனேயே அதை எதிர்த்து அறிக்கை தந்தது மட்டுமின்றி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டக் களத்துக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் நாசகார ஆலையை இழுத்து மூடுவதற்கு மக்கள் மன்றத்தில் எத்தகைய எழுச்சி ஏற்பட வேண்டும் என்று வைகோ விரும்பினாரோ அந்த வகையில் மக்கள் வீறுகொண்டு எழுந்ததற்கு வரவேற்பு அறிக்கையும் கொடுத்தார்.

தேனி மாவட்டத்தைச் சூறையாட மோடி அரசு வலிந்து திணித்து வரும் நியூட்ரினோ ஆய்வகத்தை விரட்டி அடிக்க மக்கள் சக்தியை திரட்டுவதற்கு மார்ச் 31 முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரையில் 225 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்ட வைகோ அவர்கள், ஏப்ரல் 17 முதல் மூன்று நாட்கள்  தூத்துக்குடி மாவட்டத்தில், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்று மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டார். இதற்காக ஏப்ரல் 28 ஆம் தேதி தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடி வரும் வைகோ அவர்களைச் சந்தித்துப் பேச ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கித் தருமாறு உலகக் கோடீஸ்வரன், ஸ்டெர்லைட் நிறுவனம் நடத்தும் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் பலமுறை வெவ்வேறு வழிகளில் முயன்றபோதும் முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தவர் வைகோ.

கொண்ட கொள்கையில் இம்மியளவும் மாறாமல், ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாமல், எவராலும் நெருங்க முடியாத நேர்மையான தலைவராக பொதுவாழ்வில் பொன்விழா கண்ட தலைவர் வைகோ அவர்களை, நேற்று பெய்த மழையில் முளைத்த காளானான தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன், வைகோ வன்முறையாளர், ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் வாங்க வேண்டியதை வாங்கியவர், அவரது பயணத்தை தடை செய்ய வேண்டும் என்று வசைபாடுவதும், அவதூறு செய்வதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தமிழர் நலன், தமிழகத்தின் நலன்களுக்காக இந்திய நாடாளுமன்றத்தில் ஒன்பது பிரதமர்களை எதிர்த்து தனிமனிதராகப் போராடிய வரலாறு வைகோவுக்கு மட்டுமே உண்டு. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாத நெஞ்சுறுதி கொண்ட வைகோவை மிரட்டுவதற்கான துணிச்சல் இந்த உலகத்தில் எவருக்கும் இல்லை என்பதை தமிழிசை புரிந்துகொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற பரப்புரை மேற்கொண்ட வைகோவுக்கு கறுப்புக்கொடி காட்டுவதற்கு பா.ஜ.க.வினர் முயன்றபோது, அதைத் துணிச்சலாக எதிர்கொண்ட தலைவர் வைகோ. ஆனால் பா.ஜ.க.வினர் கறுப்புக்கொடி என்ற பெயரில் திட்டமிட்டு வைகோ மீது கற்களை எறிந்து, வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதே போன்றுதான் முதல் நாள் பயணத்தில் குளத்தூரில் பாட்டீலை வீசி தாக்க முற்பட்டனர்.  பா.ஜ.க.வினரின் இதுபோன்ற வன்முறைச் செயல்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையினரின் அலட்சியப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக வாழ்வாதாரங்களைக் காப்பதற்கும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் களத்தில் நின்று போராடும் தலைவர் வைகோ அவர்களின் பாதுகாப்புக்கு சிறு ஆபத்து என்றால் தமிழர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கின்றேன். வைகோ அவர்களின் தமிழக வாழ்வாதாரப் பயணத்தில் மேலும் இதுபோன்ற வன்முறைச் சம்பங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Posts