தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக, உள் மாவட்டங்களிலும், மேற்கு உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இம்மாதம் 4ஆம் தேதி, கத்தரி வெயில் தொடங்கிய நாள் முதல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், 100 டிகிரியைத் தாண்டி, வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீலகிரி,கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தேனி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசைக் காற்றின் சாதகமான சூழல் காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, வெப்ப அலை வீச வாய்ப்பு இல்லை என்றும், அதாவது, அனல் காற்று வீச வாய்ப்பு இல்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Related Posts