தமிழ்நாட்டில் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்திய டாக்டர் அறிவொளி காலமானார்

 

 

தமிழ்நாட்டில் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்திய டாக்டர் அறிவொளி உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் காலமானார்.அவருக்கு வயது 80.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள ஹனீபா காலனியை சேர்ந்தவர் டாக்டர் அ.அறிவொளி. தமிழறிஞரும், ஆன்மீக இலக்கிய சொற்பொழிவாளருமான இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதி சடங்கு திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் அருகே உள்ள ஹனீபா காலனியில் இருந்து இன்று மாலை நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு தமிழறிஞர்கள், ஆன்மிக பெரியோர்கள் உள்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1986-ம் ஆண்டு வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்திய டாக்டர் அறிவொளி, டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று முறை மருத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை கொண்டு சென்ற இவர் புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts