தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிக்கப்பு : வைகோ கண்டனம்

கனரா வங்கிப் பணியில் தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, என்.எல்.சி., பெல் மற்றும் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் கொடுமை தொடர்வதாக அறிக்கையில் அவர் கூறியுள்ளார். ரயில்வே துறையைப் போன்று மத்திய அரசு வங்கிப் பணியாளர் தேர்வுகளிலும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நுழையும் படலம் தொடங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில், எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 464 பேரில், 250-க்கும் மேற்பட்டோர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வங்கி உதவியாளர், எழுத்தர் போன்ற பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் விதி என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கு தமிழே தெரியாதவர்களை தேர்வு செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது என்று வைகோ தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். வெளிமாநில பணியாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டால், தமிழ்நாட்டு வங்கிகளில் மீண்டும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி அறியாதவர்களை, மொழி அறிவு இருப்பதாக தகிடுதத்தம் செய்து, எழுத்தர் பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள உத்தரவை கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தவறினால், தமிழ்நாட்டில் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுத்து நிறுத்த, அறப்போராட்டத்தை கனரா வங்கி எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் வைகோ கூறியுள்ளார்.

Related Posts