தமிழ்ப்புத்தாண்டு தினம் :பன்வாரிலால் புரோகித், எடப்பாடி பழனிச்சாமி  வாழ்த்து

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் தமிழ்ப்புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவதாகவும், வீரத்தோடு கூடிய அன்பு, இரக்கம் ஆகியவற்றால், உலக அளவில் தமக்கென தனி அடையாளத்தை படைத்திருக்கும் தமிழ் மக்கள், நேர்மை, ஒழுக்கம், அமைதி ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழனென்ற பெருமையோடு தலைநிமிர்ந்து நில்லடா! தரணியெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா! என்ற நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி, ஈடில்லா வரலாற்றை கொண்டுள்ள தமிழ் பெருமக்கள் சித்திரை திருநாளை புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த இனிய புத்தாண்டு உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  2019மக்களவைத் தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னதாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது எனவும், தமிழர்கள் அனைவரும் தங்களது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பெருமை இவற்றையெல்லாம் பறிக்கிற அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை தமிழர்கள் அனைவரும் மனதில் கொண்டு மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிற அரசுகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க தமிழ் புத்தாண்டில் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்வதாக கே.எஸ்.அழகிரி.குறிப்பிட்டுள்ளார்.

Related Posts