தமிழ் தெரியாதவர்களை சிவில் நீதிபதிகளாக நியமித்தால் கீழமை நீதிமன்றங்கள் இந்தியிலும், பிற மொழிகளிலும் இயங்கும்

தமிழ் தெரியாதவர்களை சிவில் நீதிபதிகளாக நியமித்தால் கீழமை நீதிமன்றங்கள் இந்தியிலும், பிற மொழிகளிலும் இயங்கும் நிலை உருவாகி விடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாடு நீதித்துறையில் சிவில் நீதிபதி பணிகளுக்கான போட்டித் தேர்வை தமிழ் மொழி தெரியாதவர்களும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சிவில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை, சாட்சியம் உள்ளிட்ட அனைத்தும் தமிழ் மொழியில் தான் நடக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். சிவில் வழக்குகளைக் கையாள்வதில் மொழி சார்ந்த சிக்கல்கள் இருக்கும் நிலையில், தமிழ் மொழி அறியாதவர்கள் கூட சிவில் நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித் தேர்வுகளை பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எழுதலாம் என்ற விதிமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில ஆண்டுகளாக ரயில்வே துறை, அஞ்சல் துறை, வங்கிகள் என மத்திய அரசுப் பணிகள் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அபகரித்து வரும் வெளிமாநிலத்தவர்கள், டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசுப் பணிகளையும் கைப்பற்றத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவது ஒருபுறமிருக்க பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Posts