தலைமை நீதிபதி தஹில் ரமாணியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமாணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த ரமாணி, தனது ‌ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள ‌வழக்குகளின் பட்டியலை பதிவுத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், தலைமை நீதிபதி தஹில் ரமாணியும், நீதிபதி துரைசாமியும் முதல் அமர்வில் வழக்குகளை விசாரிப்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் ராஜினாமா ஏற்கப்ப‌டவில்லை என்றாலும், ராஜினாமா கடிதம் அனுப்பியவர் எவ்வாறு வழக்குகளை விசாரிப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன் பட்டியலிடப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமாணியை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்துள்ளார். பதவியிலிருந்து விலகும் முடிவை கைவிட வேண்டும் என தஹில் ரமாணியிடம் சி.வி.சண்மும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts