தலைமை நீதிபதி வழக்கு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அலுவலகத்தில், பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி மீது, அத்துமீறல் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகார், தனது நேர்மையான வாழ்க்கைக்கு விடப்பட்ட சவால் என தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், முன்னாள் பெண் ஊழியரின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்திருந்தார்.

இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அருண் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ரோஹிண்டன் நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், உத்சவ் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர், கடந்த திங்கட்கிழமையன்று, உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தலைமை நீதிபதி மீதான புகார் அதிர்ச்சியளிப்பதாகவும், அவருக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாகவும் கூறியிருந்தார். முதலில், புகார் கூறிய பெண் சார்பில் ஆஜராக விரும்பியதாகவும், ஆனால், வழக்குத் தொடர்பாக அஜய் என்பவர், தன்னை அணுகி, ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசியதாகவும், தனது பிரமாண பத்திரத்தில், அந்த வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டவாறு, வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ், நேரில் ஆஜரானார். அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான கூட்டுச்சதி தொடர்பான, சிசிடிவி பதிவுகளை சமர்பித்தார். இந்த கூட்டுச்சதியுடன் கூடிய குற்றத்திற்கு மூளையாக செயல்படுகிறவர் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும், வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சிபிஐ இயக்குநர், டெல்லி காவல்துறை ஆணையர், மத்திய உளவுத்துறை இயக்குநர் ஆகியோர், நேற்று நண்பகல் 12.30 மணிக்கு, தங்கள் அறையில் ஆஜராக, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின்படி ஆஜரான , மூன்று பேரிடமும்  சிறப்பு அமர்வு ஆலோசனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு அமர்வு கூடியபோது, தலைமை நீதிபதி மீதான புகார் என்பது, சுதந்திரமான நீதிபரிபாலனங்களை பாழ்படுத்தும் செயல் என்றும், அதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

சிசிடிவி காட்சிப்பதிவு ஆதாரம், தன்னை சந்தித்த லாபியிஸ்டுகள், உச்சநீதிமன்ற மூன்று முன்னாள் ஊழியர்களுடனான சந்திப்பு ஆகியவை குறித்து, விரிவான விளக்கங்களுடன், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு, வழக்கறிஞர் உத்சவ் பெயின்சுக்கு சிறப்பு அமர்வு உத்தரவிட்டது. இதனையடுத்து, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரணையை ஒத்திவைப்பதாகவும் ஆணையிட்டது இதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. .

 

Related Posts