தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல்

திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர்.

இன்று வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். இதேபோல், துரைமுருகனும் தனது வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து, அண்ணா அறிவாலயம் சென்ற இருவரும் தங்கள் வேட்புமனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் தாக்கல் செய்தனர்.

ஸ்டாலினை 65 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிந்துள்ளனர். எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.வேட்பு மனுக்கள் இன்று மாலை 5மணி வரை பெறப்படுகிறது.

மேலும் வேட்பு மனுவை திரும்ப பெறுபவர்கள் நாளை மதியம் 1.30க்குள் திரும்ப பெறலாம் என்றும் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றப் பின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மாலை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவரா என்று கேள்விக்கு நாளை மாலைதான் விடை தெரியும் என்றார்.

சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் பேசுகையில், 100-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் மு.க.ஸ்டாலின்  பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்றும் கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் ஜே.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,திமுக ஒரு ஜனநாயக இயக்கம் எனவும் நாளை மறுநாள் போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.

Related Posts