திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள்  நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில்  அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மதிமுக தொகுதி பங்கீட்டு குழு இன்று பேச்சு வார்த்தை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக பொருளாளர்,கணேசமூர்த்தி, ” வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. – ம.தி.மு.க. இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக தெரிவித்தார். தங்கள் கட்சி தலைமையின் கருத்துக்களை தி.மு.க.தொகுதி பங்கீட்டு குழுவில் தெரிவித்து இருப்பதாகவும், அதை அவர்களுடைய தலைமையிடம்  எடுத்துக் கூறி பரிசீலிப்பதாக கூறியுள்ளனர் என்றும் தெரிவித்தார். தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி இரு தலைமைகளும் கூடி அறிவிப்பார்கள் என்று அவர்  கூறினார். அடுத்த மாதம் 6 ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அதற்கான நிகழ்ச்சி நிரல்களைப் பற்றி விவாதிக்க வரும் 25 ஆம் தேதி உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கணேசமூர்த்தி தெரிவித்தார்.

Related Posts