திமுக எம்எல்ஏ.க்கள் ஊதிய உயர்வை ஏற்கமாட்டார்கள்: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

 

 

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்கும் வரை, திமுக எம்எல்ஏ.க்கள் ஊதிய உயர்வை ஏற்கமாட்டார்கள் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-01 

மே தினத்தையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தினப் பூங்காவில் உள்ள நினைவுத்தூணுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர்,அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை அரசு ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மே தினத்தை நாம் தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம்.  மே தினம் என்பது தொழிலாளர்களுக்காக கொண்டாட கூடிய நாளாக அமைந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில்தான் மே தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.  தொழிலாளர்களின் உரிமைகளை போற்றும் வகையில் மே தினத்தை கொண்டாடுகிறோம்.
ஆனால் மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களின் விரோத ஆட்சியாக விளங்குகிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் அரசின் கடமையாகும். அதை செய்யவில்லை. எனவே மத்திய-மாநில ஆட்சியை அப்புறப்படுத்துவதுதான் நமது முதல் நோக்கமாக இருக்க வேண்டும். பஸ் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக தி.மு.க. பல கட்டங்களாக போராட்டம் நடத்தியது. ஆனாலும் அரசு செவி சாய்க்கவில்லை. பஸ் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை தீரும் வரை எம்.எல்.ஏ.க்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை வாங்க மாட்டோம் என்று சட்டசபையில் அறிவித்தோம். அதை இன்று வரை வாங்காமல் உள்ளோம்.  பஸ் தொழிலாளர்கள் போதிய சம்பள உயர்வு இல்லாமல் வாடும்போது எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் எதற்காக இந்த அரசு சம்பளத்தை உயர்த்த வேண்டும்? அதனால்தான் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வாங்காமல் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts