திமுக தலைவர் ஸ்டாலின்-க்கு வைகோ வாழ்த்து

திமுகவின் தலைவர் பொறுப்பை ஏற்று இருக்கும் மு.க.ஸ்டாலின், வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இளம் வயதிலேயே இளைஞர் தி.மு.க., என்னும் சார்பு அமைப்பைத் தொடங்கி, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட கட்சி முன்னணியினரை அழைத்துக் கூட்டங்கள் நடத்தி, திமுகவுக்கு வலுசேர்த்த இளைஞர்தான் மு.க.ஸ்டாலின் என கூறியுள்ளார்.

1975 இல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, காவலர்களின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகியவர் ஸ்டாலின் எனவும், சிறை சித்ரவதைகள்தான் பின்னாளில் திமுகவிற்கு வலிய படைக்கலனாக, இளைஞர்களின் ஈட்டி முனையாக வார்ப்பிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1989 இல் தேசிய முன்னணி தொடங்கப்பட்டபோது, வெள்ளைச் சீருடை அணிந்த இளைஞர்களின் அணி வகுப்பிற்கு தலைமை தாங்கி,ஸ்டாலின் பீடு நடை போட்டதையும், வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் தி.மு.கவின் இளைஞர் சக்தியைக் கண்டு வியந்து பாராட்டியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், சென்னை மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைச்சர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று, சிறப்பாக கடமையாற்றிவர் ஸ்டாலின் என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தற்போது சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயகக் கடமைகளை சீரிய முறையில் ஆற்றி வரும் மு.க.ஸ்டாலின், கருணாநிதிஉடல்நலம் குன்றியிருந்த நிலையில் செயல் தலைவராக பொறுப்பு ஏற்று, திமுகவிற்கு அரும்பணி ஆற்றியவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறைகூவல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தையும், தமிழ்நாட்டின் நலனையும் காக்க, திமுகவின் தலைவர் பொறுப்பை ஏற்று இருக்கும் மு.க.ஸ்டாலின், வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவ பருவத்தில் அண்ணாவின் அன்பைப் பெற்று, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என, கருணாநிதியின் கண் அசைவுக்கு ஏற்ப பணியாற்றிவர் நண்பர் துரைமுருகன் எனவும், திமுக பொருளாளராக பொறுப்பை ஏற்றுள்ள அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே திமுக தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து, பட்டு சால்வை மற்றும் ஆளுயுர மாலை அணிவித்து  பூங்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Related Posts