திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் வைகோ

தமிழ் இன விடுதலைக்கு வழிகாட்டும் திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டுக்கு வரும் 27-ந் தேதியன்று சேலத்தில் அணி திரள்வோம் என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ அழைப்பு விடுத்துள்ளார். சற்று உடல்நலம் இன்றி, மருத்துவர்களின் கட்டுப்பாடு காரணமாக, ஓய்வில் இருந்தாலும்கூட, என் மனமெலாம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டு நிகழ்வுகளை நோக்கியே மையம் கொண்டுள்ளது என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகமாக வீறு கொண்டு எழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்ற அதே சேலம் மாநகரில், ஆகஸ்ட் திங்கள் 27 ஆம் நாளில், தமிழர் உரிமைப் பாசறையாம் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாடு எழுச்சியுடன் நடைபெறுவதை அறிந்து, நெஞ்சமெலாம் இனிக்கின்றது என்று கூறியுள்ளார். உறுதியும் உணர்ச்சியும் பெருக்கெடுத்தோடும் உள்ளம் படைத்த உத்தம வீரர்களே, உங்கள் நாட்டின் எதிர்காலம், இனத்தின் எதிர்காலம் எப்படி அமைதல் வேண்டும் என்பதை எடுத்துரைக்க சேலம் வாருங்கள் என்று 75 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா அழைத்தாரே, அந்த சேலத்தில்தான் இப்போதும் மாநாடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சூதும் சூழ்ச்சியும் புகமுடியாத வளமான உமது மனத்திலே தோன்றும் தூய கருத்தை அச்சம் தயை தாட்சணியமின்றி எடுத்துக் கூற வாரீர் சேலத்திற்கு என்று அழைக்கிறோம் என அண்ணா அன்று குறிப்பிட்டதை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிமைப்போர் நடத்த இதுவே சரியான காலம் என்பதை சேலம் எடுத்துக்காட்டும் என்று நம்புகிறோம் என திராவிட நாடு இதழ் மூலம் அண்ணா அறைகூவி அழைத்தது இன்றைக்கும் பொருத்தமாகத்தானே இருக்கின்றது? என அவர் வினவியுள்ளார். 75 ஆண்டு வரலாறு காணும் திராவிடர் கழகம், நூறாண்டுகளைக் கடந்தும் தொடரும் திராவிட இயக்கம், தமிழ் மண்ணில் நிகழ்த்திய சாதனைகள், புரட்டிப் போட்ட புரட்சிகள் ஏராளம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக நீதி, பெண்கள் உரிமை, மதநல்லிணக்கம், சமத்துவம் முதலான மறுமலர்ச்சி மாண்புகள் இந்தியத் துணைக் கண்டத்திலேயே, தமிழகத்தில் மட்டும் செழித்து செம்மாந்த நிலையில், உயிர்த் துடிப்புடன் உலவி வருவதற்கு பெரியார்-அண்ணா பெரும்படைதான் காரணம் என்று வைகோ கூறியுள்ளார்.

நம் விழி திறந்த வித்தகர்களான பெரியாரும், அண்ணாவும் இல்லை என்ற துணிச்சலில், திராவிடத்தை ஆரியவர்த்தம் ஆக்கிட ஆளுகின்ற காவிக்கூட்டம் களம் இறங்கி உள்ள காலம் இது என வைகோ குறிப்பிட்டுள்ளார். ‘இந்து’ எனும் மயக்க மருத்து தந்து, வர்ணாசிரம தர்மத்தை உயிர்ப்பிக்கும் பகீரதப் பிரயத்தனம் அவர்களின் அம்புறாத்தூளியில் இருந்து அடுக்கடுக்காகப் புறப்பட்டு வரும் அம்புகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றைத் தடுத்துத் தகர்ப்பதற்கு, பெரியார்-அண்ணா கொள்கை எனும் அறிவு ஆயுதம் ஏந்த வேண்டிய காலத்தில்தான் திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலத்தில் நடக்கின்றது என்று அவர் கூறியுள்ளார். ஈரோட்டுப் பட்டறையிலும், காஞ்சிப் பாசறையிலும் வார்ப்பிக்கப்பட்ட திராவிடச் சிந்தனை எனும் கவசம் ஏந்தி, சங்கொலி முழங்கி அணிவகுத்திட, தமிழர்கள் சேலத்திற்கு அணிவகுத்திட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். சற்று உடல்நலம் இன்றி, மருத்துவர்களின் கட்டுப்பாடு காரணமாக, ஓய்வில் இருந்தாலும்கூட, என் மனமெலாம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டு நிகழ்வுகளை நோக்கியே மையம் கொண்டுள்ளது என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். திராவிடர் கழகத்தின் தலைவர்-விடுதலை ஆசிரியர் – தமிழர் தலைவர் நம் அனைவரின் மூத்த அண்ணன் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில், தி.மு.கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரை ஆற்றுவதும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களும், நம் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு முழக்கமிடுவதும் மகிழ்ச்சிக்கு உரியதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன உணர்வோடு அனைவரும் மாநாட்டுக்கு அணி திரண்டு வாருங்கள் என்று, பெரியாரின் பேரன்-திராவிட இயக்கப் போர்வாள் எனும் உணர்வோடு அழைக்கின்றேன், தமிழ் இன விடுதலைக்கு வழிகாட்டும் திராவிடர் கழகப் பவள விழா மாநாடு, வெற்றிகளைக் குவிக்கவும், புதிய சரித்திரம் படைக்கவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகின்றேன் எனவும் வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts