திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை

திருச்சி மத்திய சிறையில் 50- க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை புழல் சிறையில் கைதிகள் தொலைக் காட்சி பெட்டி, மெத்தை, செல்போன் வசதியுடன் சிறப்பு உணவு தயாரித்து சொகுசு வாழ்க்கை நடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.  விசாரணையில், சிறை அதிகாரிகள் உதவியுடன் கைதிகள் இந்த சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சொகுசு வாழ்க்கை நடத்திய கைதிகள் 4 பேரும் அவர்களுக்கு உதவிய சிறை வார்டன்கள் 8 பேரும் அதிரடியாக வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 6.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலையில், மாநகர காவல்துறை உதவி ஆணையர் சிகாமணி, சிறைத்துறை கண்காணிப்பாளர் நிகிலா ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் சிறை காவலர்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு அதிரடியாக சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் எந்தவிதமான பொருட்களும் சிக்கவோ, கைப்பற்றப்படவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல், திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள திருச்சி மத்திய பெண்கள் சிறையிலும் இன்று காலை போலீசார் சோதனை நடத்தினர்.திருச்சி மத்திய ஆண்கள் சிறையில் ஆயிரத்து 300 கைதிகள் உள்ளனர். இதில் சுமார் 800 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts