திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருச்செந்தூரில் இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப் பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று மாலை நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப் பட்டு உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்த வந்த வண்ணம் உள்ளனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணிக்கும், இரவு 8.50 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.

Related Posts