திருடனை துரத்தி பிடித்த சிறுவன்: சென்னை காவல் ஆணையர் பாராட்டு

 

 

சென்னை அண்ணாநகரில் செயின் பறிப்பு திருடனை விரட்டிச் சென்று பிடித்த சிறுவனை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பரிசு வழங்கிப் பாராட்டினார்.

சென்னை, ஏப்ரல் -19

சென்னை அண்ணாநகர் டி பிளாக் பகுதியை சேர்ந்த மருத்துவரான அமுதாவின் கிளினிக்கிற்கு, நோயாளி போல வந்த நபர் ஒருவர் தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார். அவரை பரிசோதிக்க மருத்துவர் அமுதா முயன்ற போது, திடீரென அவரது கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான். கிளிக்கில் இருந்த வெளியில் ஓடி வந்து கூச்சலிட சாலையில் சென்றவர்கள் யாரும் தப்பியோடிய கொள்ளையனை பிடிக்க முயலவில்லை. அப்போது அதே பகுதியை சேர்ந்த சிறுவன் சூர்யா மட்டும் துணிச்சலாக விரட்டிச் சென்று கொள்ளையனை கீழே தள்ளி பிடித்துள்ளார். பின்னர் அவரது சகோதரர் உதவியுடன் அந்த நபரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் கண்டிகையை சேர்ந்த ஜானகிராமன் என்ற அந்த செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்து  10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராமன், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் உள்ளிட்ட உயரதிகாரிகள் சிறுவன் சூர்யாவை நேரில் அழைத்துப் பாராட்டினர். அப்போது, சிறுவனுக்கு காவல் ஆணையர் விஸ்வநாதன் பரிசளித்தார். தைரியமாக குற்றவாளிகளைப் பிடிக்க பொதுமக்களும் முன்வந்தால் குற்றங்கள் தடுக்கப்படும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறினார். குற்றவாளிகளைப் பிடிக்க உதவும் பொதுமக்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன் சூர்யா, எல்லோரையும் உதவிக்கு அழைத்தேன், யாருமே வரவில்லை. துணிந்துதான் வேறு வழியில்லாமல் விரட்டிப் பிடித்தேன். எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்களேயொழிய யாரும் உதவ முன்வரவில்லை. போலீஸ் வந்தபின்னர் சுற்றி நின்றவர்கள் போட்டோ எடுக்கத்தான் ஆர்வம் காட்டினார்களே தவிர நான் போராடியபோது பிடிக்க வரவில்லை என்றார்.

 

Related Posts