திருப்பதியில் ரெட் அலர்ட் அறிவிப்பு

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில், திருப்பதியில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22-ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியும், இலங்கையைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகளும் கோயம்புத்தூருக்கு ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோயில், சித்தூர் அருகில் உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோயில் உள்ளிட்டவற்றுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதனால் காணிப்பாக்கம் விநாயகர் கோயில், திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருமலைக்குச் செல்லும் வாகனங்கள் திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் மோப்ப நாய் படை, வெடிகுண்டு அகற்றும் படை உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் அனைத்தும் முழுமையான சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

Related Posts