திருப்பதி நாணயங்களை மாற்ற நிர்வாகம் புதிய திட்டம்

30 கோடி மதிப்புள்ள நாணயங்களை மாற்ற திருப்பதி நிர்வாகம் புதிய திட்டம் தீட்டியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் உண்டியல் மூலம் 3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் மட்டுமே ஆண்டுக்கு ஆயிரத்து 300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இதில் நாணயங்கள் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் வரை காணிக்கையாக வருகிறது. ஜல்லடைகள் மூலம் பிரித்து 10, 5, 2, 1 என மூட்டைகளாக கட்டப்பட்டு, திருப்பதியில் தேவஸ்தான அலுவலகத்தில் உள்ள பெட்டகங்களில் அவை பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
இந்த நாணயங்கள் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 2 முறை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாணயங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படவில்லை. இந்த நாணயங்களை சரிபார்த்து வாங்க அதிக நேரம் செலவாகும் என்பதால் எந்த வங்கியும் நாணயங்களை பெற்றுக்கொள்ள முன் வரவில்லை. இதே நிலை நீடித்தால் நாணய பிரச்சினை வரும் என்பதை உணர்ந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஒரு கோடி ரூபாய் வரை நாணயங்களை டெபாசிட் செய்து கொள்ளும் வங்கியில், மேலும் ஒரு கோடி தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்தது. ஒரே சமயத்தில் 2 கோடி வரை டெபாசிட் வருகிறது என்பதால் நாணயங்களை பெற்றுக் கொள்ள வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

Related Posts