திருப்போரூரில் இரண்டாவது விமான நிலையம்

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் திருப்போரூரில் அமைவதற்கான அதிகபட்ச சாத்தியக் கூறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் வரும் ஆண்டுகளில் பயணிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புதிய விமான நிலையம் அமைக்க 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக 6 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிடம் வழங்கியுள்ளது. அதன்படி சென்னை அருகே உள்ள வளத்தூர், தொடூர், செய்யூர், திருப்போரூர், மதுரமங்கலம், மப்பேடு ஆகிய ஆறு இடங்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. திருப்போரூர் பகுதியில் உப்பு உற்பத்தி செய்வதற்காக மாருதி மரைன் எனும் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த 3 ஆயிரத்து 612 ஏக்கர் அரசு நிலம் குத்தகை காலம் முடிந்து தற்போது காலியாக உள்ளது. இதனால் நிலத்தைக் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏதுமில்லை. மேலும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் செங்கற்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு மத்தியில் திருப்போரூரில் இந்த நிலம் உள்ளதால் போக்குவரத்துக்கும் சிரமம் இருக்காது என கருதப்படுகிறது. இதற்கிடையில் 200 அடியில் படூரில் துவங்கி மாமல்லபுரம் வரை புதிய 6 வழி சாலை பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர், பையனூர் ஆகிய பகுதிகளில் விமான நிலைய குடியிருப்புகள் உருவாக்குவதற்கான நிலங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்போரூர் உள்ளது. மற்ற 5 இடங்களும் இதைவிட கூடுதல் தொலைவிலேயே உள்ளன. எனவே திருப்போரூர் பகுதியில் சென்னையின் 2 வது விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

Related Posts