திருவண்ணாமலை: குழந்தை கடத்தல் கும்பல் எனக்கூறி மூதாட்டி அடித்துக்கொலை – 4 பேர் படுகாயம்

 

 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகே குழந்தைகளை கடத்த வந்தாகக் கூறி, 5 பேரை கிராம மக்கள் கண்மூடித்தனமாக அடித்து உதைத்ததில், சென்னையைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி, வெங்கடேசன் ஆகியோர் தங்களது உறவினர்கள் மோகன்குமார், சந்திரசேகரனை அழைத்துக் கொண்டு ஜவ்வாது மலை அடிவாரத்தில் தண்ணீர் குளம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றனர். இவர்கள் சென்ற காரை கஜேந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார். அங்கு, கோவிலின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பெண்குழந்தைக்கு காரில் சென்றவர்கள் சாக்லேட் கொடுத்ததாக கூறப்படுகிறது.  இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் குழந்தையை கடத்துவதாக நினைத்து காரில் சென்றவர்களை, சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர்.  ஆடைகிழிந்து படுகாயத்துடன் குற்றுயிராக கிடந்தவர்களையும் சூழ்ந்து நின்று காட்டுமிராண்டித்தனமாக கொடூர தாக்குதல் நடத்தினர்.

மிருகத்தனமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 65 வயதான ருக்மணி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வெங்கடேசன், மோகன்குமார் ஆகியோர் வேலூர் மருத்துவமனையிலும், சந்திரசேகரன் மற்றும் கஜேந்திரன் திருவண்ணாமலை மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.அவர்கள் அங்குள்ள 30 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குழந்தை கடத்த வந்திருப்பதாக கூறி வடாநிலத்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வெளியூரைச்சேர்ந்த நபர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

Related Posts