திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது

திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட, 32 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கள்ளச்சாவி போட்டு கொள்ளையடித்த வங்கி ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் : மே-29

திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் முதல் மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு என இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு ஊழியர்கள் நேற்று வங்கியைத் திறந்தபோது கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்தது. வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த பலகோடி ரூபாய் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி நடத்திய விசாரணையில், வாடிக்கையாளர்களின் லாக்கர்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதும், கள்ளச்சாவி மூலம் பெட்டகங்கள் திறக்கப்பட்டு அடகு நகைகள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய காவலாளி இல்லாத நிலையில், 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மேலாளர் சேகர் மற்றும் காவலாளி உள்பட 8 வங்கி ஊழியர்கள் பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் வங்கி அலுவலக உதவியாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், 10 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ நகைகளையும் மீட்டுள்ளனர்.

Related Posts