திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி காலமானார்.இதனால் அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை அடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதியும் காலியானது. இதையடுத்து திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. சட்ட விதிகளின்படி இந்த இரு தொகுதிகளிலும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டனர். வாக்குச்சாவடி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஓரிரு நாட்களில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்த்து அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.  தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts