திரைப்பட வசூலுக்காக நடிகர்கள் பேசுகிறார்கள்

தமிழக மக்கள் ஜீவாதார பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல், திரைப்பட வசூலுக்காக நடிகர்கள் பேசுவதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி உள்ளிட்ட பொதுமக்களின் பல்வேறு போராட்டகளங்களுக்கு வராத விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் வசூலுக்காக மட்டும் வாய் திறப்பதாக குற்றம்சாட்டினார். மக்கள் நடிகர்களை பற்றி சரியாக புரிந்து கொண்டுள்ளதாகவும், இனி கோடம்பாக்கத்தில் அரசியலுக்கு வேலை இல்லை எனவும் அவர் கூறினார். கட்சி ஆரம்பித்த கமல்ஹாசனால் அடுத்த நகர்வு செல்ல முடிந்ததா என கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி, வெளிநாடுகளில் மட்டும் நிர்வாகிகளை நியமிக்கும் ரஜினியால் தமிழ்நாட்டில் எவரையும் நியமிக்க முடியவில்லை என கூறினார். முதல்வர் குறித்த கருணாஸ் பேச்சை ஒரு போதும் ஏற்றுகொள்ளவில்லை எனவும், ஆனால், ஹெச்.ராஜா, எஸ்வி.சேகர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு கருணாசுக்கு மட்டும் தொடர்ந்து நெருக்கடி கொடுப்பது நியாயமல்ல எனவும் கூறினார். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த கூடாது எனவும், மீறி செயல்படுத்தினால் மக்கள் போராட்டம் வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

Related Posts