தி.மலையில் மூதாட்டி அடித்துக்கொலை: காவல்துறைக்கு பயந்த தலைமறைவான கிராம மக்கள்

 

 

திருவண்ணாமலை அருகே, குழந்தை கடத்தும் கும்பல் என்று கருதி மூதாட்டியை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில், இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் பெரும்பாலான மக்கள் தலைமறைவாகியுள்ளதால் கழியம் கிராமம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி என்பவரின் குடும்பத்தினர், குலதெய்வ வழிபாட்டுக்காக, சொந்த ஊரான போளூர் அருகே கம்புகொட்டான்பாறைக்கு காரில் சென்றனர். அத்திமூர் சோதனைச்சாவடி அருகே காரை நிறுத்தி கிராமத்தினரிடம் வழி கேட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த 4 வயது பெண் குழந்தைக்கு ருக்மணி சாக்லேட் வழங்கியுள்ளார். சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள், குழந்தை கடத்தும் கும்பல் என கருதி வாக்குவாதம் செய்தனர். இந்த தகவல், காட்டுத்தீப் போல் பரவியதால், ருக்மணி குடும்பத்தினர் சென்ற காரை, கழியம் கிராமத்தில் வழிமறித்து கிராம வாசிகள் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ருக்மணி அணிந்திருந்த 40 பவுன் தங்க நகைகள் காணவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குழந்தை கடத்தல் கும்பல் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கழியம் கிராமத்தில் வீடு வீடாக சோதனை நடத்தி வரும் காவல்துறையினர், பக்கத்து கிராமங்களிலும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கிராமவாசிகளில் பெரும்பாலானோர் ஊரை காலிசெய்துவிட்டு, தலைமறைவாக உள்ளனர். இதனால், ஊர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

Related Posts