தீன்மூர்த்தி பவனில் இருந்து நேரு அறக்கட்டளை வெளியேற மத்திய அரசு உத்தரவு

தீன்மூர்த்தி பவனில் இருந்து நேரு அறக்கட்டளை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

          ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது டெல்லியில் உள்ள அரசு மாளிகையான தீன்மூர்த்தி பவனில் வசித்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த இல்லம் நேரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. மேலும், பெரிய நூலகமும் செயல்பட்டு வருகிறது. கடந்த 1964 ஆம் ஆண்டு நேரு நினைவு நிதியம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றும் தொடங்கப்பட்டு, அறக்கட்டளையின் அலுவலகமும் தீன்மூர்த்தி பவனில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக கரன்சிங்கும் இருந்து வருகின்றனர். அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு படிப்பு உதவி, ஆய்வு மாணவர்களுக்கு நிதி உதவி என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

         சமீபத்தில் தீன்மூர்த்தி பவனை அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகமாக மாற்ற போவதாக மத்திய அரசு அறிவித்தது. தற்போது, தீன்மூர்த்தி பவன் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் தீன்மூர்த்தி பவனில் செயல்படும் நேரு நினைவு நிதிய அலுவலகத்தை அங்கிருந்து காலி செய்யும் படி வீட்டு வசதி, மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

         இது தொடர்பாக அறக்கட்டளைக்கு கடந்த 11-ந் தேதி நோட்டீசு அனுப்பப்பட்டது. செப்டம்பர் 24-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. காலி செய்யும்படி வந்த உத்தரவுக்கு அறக்கட்டளையின் செயலாளர் சுமான் துபே கடந்த 20-ந் தேதி பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், மத்திய அரசு இப்படி ஒரு நோட்டீசை அனுப்பி இருப்பது அறக்கட்டளையை அவமதிக்கும் செயல் எனவும், இந்த அறக்கட்டளையின் நிதியில் இருந்துதான் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

         இதுகுறித்து அருங்காட்சியக இயக்குநர் சக்தி சின்கா கூறுகையில், நேரு நினைவு நிதியம் அதிகாரப்பூர்வம் அற்ற முறையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த இடத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது இங்குள்ள நூலகத்துக்கு அதிக மக்கள் வரும் நிலையில் போதிய இடவசதி இல்லாமல் உள்ளதால் கட்டிடத்தை விரிபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், எனவே, இங்குள்ள நிர்வாக அலுவலகம், நூலகத்துக்கு சம்பந்தம் இல்லாத அலுவலகங்கள் ஆகியவற்றை வெளியேற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts