தீபிகா படுகோனேவை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சித்தராமையா கோரிக்கை!

‘பத்மாவதி’ இந்தி திரைப்படத்தில் ராஜபுத்ர சமூகத்தை சேர்ந்த 13-வது நூற்றாண்டின் சித்தூர்கர் ராணி பத்மாவதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அந்த படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரிடம் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசினார். இதுகுறித்து சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பத்மாவதி’ இந்தி படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் வெறுப்பு கலாசாரத்தை நான் கண்டிக்கிறேன். தீபிகா படுகோனே உலக அளவில் புகழ் பெற்ற நடிகை. அவருக்கு ஆதரவாக கர்நாடக அரசு நிற்கிறது. நான் அரியானா முதல்-மந்திரியிடம் பேசினேன்.
அவருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன். தீபிகா படுகோனே கர்நாடகத்தை சேர்ந்தவர். அவர் கர்நாடகம் வரும்போது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.