சிறப்பு கட்டுரை

தீர்ப்புக்கு தேவை பேனா, துப்பாக்கி தோட்டா அல்ல!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலீசாரால் நடத்தப்பட்ட என்கவுன்டர் சம்பவம் பாமரர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இதுகுறித்த ஆழ்ந்த சிந்தனையும் இதுபோன்ற துயரம் யாருக்கு வேண்டுமானலும் நடக்கும் என்ற எவ்வித அச்சமும் பாமரர்களுக்கு இல்லை என்பதுதான் கவலையளிக்ககூடியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 26 வயதான கால்நடை மருத்துவரான இளம்பெண் ஒருவர், பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த காவல்துறை குற்றத்தை மட்டும் உறுதி செய்துவிட்டு, மக்களின் உணர்ச்சி குவியலுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்களாக தங்களது தோட்டாக்கள் மூலம் தீர்ப்பு எழுதியுள்ளது. போலீசாரின் இந்த என்கவுன்டரை வீரதீர செயலாகவும், சினிமாவில் வரும் நாயகதன்மை காட்சிகளுக்கு ஒப்பாகவும் பொதுமக்களில் பெரும்பாலானோர் கொண்டாடி வருகின்றனர். இதனை சமூகத்தில் நிலவும் ஒருவகையான மனநோயாகவே பார்க்க வேண்டியுள்ளது, அதற்கான காரணங்களும் இல்லாமலும் இல்லை.

Image

ஜனநாயக நாடான இந்தியாவில் மக்கள் தொகைக்கு இணையாக குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள்தான் இதில் அதிகம். 2017 ஆம் ஆண்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி ஒவ்வொரு நாளும் சுமார் 92 பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகிறது. வழக்குகளாக மட்டுமே இத்தனை குற்றங்கள் என்றால், இன்னும் வெளியில் தெரியாமல் போனவைகளின் எண்ணிக்கை யாருக்கு தெரியும்?. இத்தனை குற்றங்களுக்கும், அதன்பிறகு நடந்த குற்றங்களுக்கும் தற்போது நடந்த என்கவுன்டர் தீர்வாகிவிடுமா?. இதுபற்றி யாருமே சிந்திக்க மறந்து போவதுதான், தொடரும் பாலியல் குற்றங்களுக்கும் காரணமாக அமைகிறது. மேலும் குற்றங்களுக்கான கடுமையான சட்டங்கள் இந்தியாவில் இன்னும் அமல்படுத்தவில்லை. இதனால் காவல்துறையால் திடீரென நடத்தப்படும் என்கவுன்டர்கள் மக்களுக்கு கொண்டாட்ட மனநிலையை அவர்களை அறியாமலேயே உட்புகுத்துகிறது. இப்படியான ஆதரவு தான் நாளை நம்மையும் பழிதீர்க்கும்.

Image result for increasing rape statistics in india

கால்நடை மருத்துவர் காணமல் போனதாக அவரது குடும்பத்தினரால் புகாரளிக்கப்பட்ட போது, அவர்களை அலைக்கழித்ததும் இதே போலீசார் என்பது இப்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தீர்ப்பு வழங்குவதற்கான அத்தனை முன்னேற்பாடுகளையும் காவல்துறை தான் நீதிமன்றத்துக்கே கொடுத்து வருகிறது. அதாவது, என்னென்ன பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்கிறதோ! அதனடிப்படையில் தான் நீதிமன்றமும் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குகிறது. ஆக குற்ற வழக்குகள் எதுவாகினும் நீதிமன்றத்திற்கு செல்லும் முன்பே பாதி தீர்ப்பு முடிவாகிவிடுகிறது. ஹைதராபாத் என்கவுன்டரை வைத்து போலீசாரை தூக்கி கொண்டாடும் அதே வேளையில், உத்தரபிரதேசம் உன்னாவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கு பின்னணியிலும் காவல்துறைக்கு பங்குள்ளது என்பதை எப்போதுதான் நாம் புரிந்துக்கொள்ள போகிறோம். உன்னாவ் விவகாரம் மட்டும் இல்லை, இன்னும் இதுபோல் ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.

ஹைதராபாத் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டுள்ள 4 பேரும், மருத்துவரை பாலியல் துன்புறுத்தல் செய்தபோது மது அருந்தியிருந்ததும் போலீசாரால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மட்டும் இல்லாமல் பெரும்பாலான குற்றங்களுக்கு மதுவும் காரணமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதுவரை மதுவிற்கு முழுமையாக தடைவிதிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு வரவில்லை. இப்படியொரு சூழலில் என்கவுன்டர் செய்துவிட்டதால் இனி பாலியல் குற்றங்கள் நடைபெறாது என்று யார்தான் உறுதியளிக்க முடியும். முறையான விசாரணை இல்லாமல் கடுமையான தண்டனை வழங்குவது எவ்விதத்திலும் இச்சமூகத்திற்கு பலன் தாராது. மேலும் குற்றங்களுக்கான தண்டனையை விட அவைகள் நடக்காமல் இருப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே இனிமேலும் குழந்தைகள், பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு தீர்வாக அமையும். இந்த நிலையில் ஹைதராபாத் என்கவுன்டர் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பு கவுன்சிலின் வழக்கறிஞர்கள் குழுவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், நீதிமன்றம் தலையிட்டு என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. உயிரோடு இருந்தபோது சரியான விசாரணை நடத்தி தண்டனை வழங்காத நீதி, இனி எப்படி கிடைக்கும் என்பதுதான் மனிதநல ஆர்வளர்களின் கேள்வியாக உள்ளது.

மிக முக்கியமாக குற்றவாளிகள் என்று போலீசாரே தீர்ப்பு வழங்கி, படுகொலை செய்யப்பட்டுள்ள 4 பேரின் குடும்பங்கள் இனி சந்திக்க போகும் பிரச்சினைகள் குறித்து யாரேனும் சிந்தித்தார்களா?. என்கவுன்டர் நடந்தவுடன் போலீசாரை பாராட்டி நீதி நிலை நிறுத்தப்பட்டுவிட்டது என்று கூறிய அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க துவங்கிவிட்டனர். ஆனால் அந்த 4 பேரின் குடும்பங்களும் இனி அவர்களின் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கப்போகும் வேதனைகளையும் யாராலும் உணர முடியாது. இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு இழிநிலைக்கு செல்வதற்கு வழிவகுக்கும். ஏனேனில் படுகொலைக்கு பின்னர் அவர்களின் குடும்பத்தினர் இதுகுறித்து தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட கேசவலுவின் மனைவி “நானும் ஒரு பெண் தான், மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து தனது கணவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். உண்மையாகவே அவர் குற்றம் செய்திருந்தால், நீதிமன்றம் தண்டித்திருக்கும்” என்றும், அவர் இல்லாமல் நான் வாழ விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். இதுபோன்றே மற்ற குற்றவாளிகளின் குடும்பத்தினரும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் எந்த தண்டனை வழங்கியிருந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுகொண்டிருப்போம் என்று கூறியுள்ளனர். அதே சமயம் பெண் மருத்துவரின் கொலையையும் நியாயப்படுத்தி விட முடியாது. குற்றங்களுக்கான தண்டனையை எப்படி கடுமையாக்க வேண்டுமோ, அதுபோன்று விசாரணையும் முறையாக இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. எந்தவொரு குற்றங்களுக்கும் தீர்ப்புகளை விட, இனி அதுபோன்று நடக்காமல் இருக்க எடுக்கப்படும் தீர்வுகள்தான் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும். இனிவரும் காலத்திலாவது இதனை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

Show More

Related News

Back to top button
Close