துணைநிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

 

துணைநிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணைநிலை ஆளுனர் மதிப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில் அதிகாரம் மத்திய அரசுக்கா, துணைநிலை ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கா என்ற போட்டியால் குழப்பம் ஏற்பட்டு வந்தது. துணைநிலை ஆளுனருக்கே அதிகாரம் என டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், அரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என்றும் கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. துணைநிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணைநிலை ஆளுனர் மதிப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மக்கள் நல திட்டங்கள் துணைநிலை ஆளுநரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் இருவருமே பொறுப்பு என்று அறிவுறுத்திய நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதே சாலச்சிறந்தது என்று தெரிவித்தனர். அனைத்து முடிவுகளுக்கும் அமைச்சரவை, துணைநிலை ஆளுனரின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியமில்லை என்றும் அரசியல் சாசனத்திற்கு கீழ்படிவது அனைவரின் கடமை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிடம் தான் அனைத்து அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆளுனர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது, இதற்கு அரசியல் சாசனம் அனுமதி வழங்கவில்லை என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அனைத்து விவகாரங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுனர் அனுப்பக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

Related Posts