துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு பொது விழாவில், அவமதித்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

      புதுவை மாநிலம் திறந்தவெளி கழிப்பறை இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன்,ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அன்பழகனும் அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் பேசிய அன்பழகன், தொகுதியில் உள்ள பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி 15நிமிடங்களுக்கு மேல் பேசினார். இதனால், ஆளுநர் கிரண்பேடி அங்கிருந்த ஒரு அதிகாரியை அழைத்து  பேச்சை நிறுத்த சொல்லுங்கள் என்று கூறினார். ஒரு முறைக்கு இரு முறை அதிகாரிகள் கூறியும் அன்பழகன் பேச்சை தொடர்ந்ததால் கோபமடைந்த கிரண்பேடி மைக்கை அணைக்கும்படி உத்தரவிட்டார்.  இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், தனது தொகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்து தான் பேசிய போது, மைக்கை துண்டிக்க கூறியது தன்னை அவமதிக்கும் செயல் என குற்றம்சாட்டினார். துணைநிலை ஆளுநர் விழாவின் ராணி இல்லை எனவும், அவர் தன்னை அவமதிக்கும் விதத்தில் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார். இது குறித்து சபாநாயகர் வைத்தியலிங்கத்திடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளதாக அன்பழகன் தெரிவித்தார்.

Related Posts