துணை ராணுவப்படை சீருடையில் மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் குவிப்பு: மம்தா

மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தெற்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட பசந்தி பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர்,  தற்போது நடைபெற்றுவரும் தேர்தலில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பலர் மோடி அரசால் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும்,  அவர்கள் தங்களது மனம்போன போக்கில் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.  பாஜகவுக்கும் மோடிக்கும் வாக்களியுங்கள் என்று வாக்குச்சாவடிக்கு வருபவர்களிடம் அங்கு காவலுக்கு நிற்கும் துணை ராணுவப் படையினர் வெளிப்படையாகவே பிரசாரம் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார். மத்திய துணை ராணுவப்படைகளை தான் அவமதிக்கவில்லை என்ற அவர், அவர்களை கருவியாக வைத்து வாக்குச்சாவடிகளில் காத்திருக்கும் மக்களை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு நிர்பந்திப்பதை எதிர்ப்பதாக தெரிவித்தார். கட்டால் தொகுதியில் இன்று ஒரு வாக்குச்சாவடிக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் தங்கள்கட்சி தொண்டர் ஒருவர்  படுகாயம் அடைந்துள்ளார் எனவும், மேற்கு வங்கத்திற்கு தேர்தல் பணிக்காக அனுப்புவதைப் போல் துணை ராணுவப் படையினருக்கான சீருடையில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாஜக தொண்டர்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு  குவித்துள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

Related Posts