துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, ஒரு நபர் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க முடியாது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, ஒரு நபர் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஒருநபர் விசாரணை ஆணையம், முறையான விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டதா? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி : ஜூன்-22

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை, தமிழக அரசு அமைத்தது. ஆனால், ஒருநபர் ஆணையம் அமைத்ததில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரணை ஆணையம் விசாரித்தால் நேர்மையான தீர்ப்பு வழங்கப்படாது எனவும் விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள்,அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில். விசாரணை ஆணையம் முறையான விதிமுறைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டதா? என்றும், சட்டத்துக்கு உட்பட்டு ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழக அரசு வரும் 27-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  

Related Posts