துப்பாக்கிச்சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய விளக்கம்

 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அவர்  கூறியதாவது:-

23-03-2013 அன்று ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பொதுமக்களிடமிருந்து அந்த ஆலைக்கு எதிராக தமிழக அரசுக்கு புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 29-03-2013 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டித்தார். அதுமட்டுமல்லாமல் ஆலையின் உரிமத்தையும் ரத்து செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 31-05-2013 அன்று ஆலையை தொடர்ந்து இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.9-04-2018 அன்று ஆலையை தொடர்ந்து இயக்க அந்த ஆலை நிர்வாகம் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பித்தது. அதற்கு அனுமதி வழங்க தமிழக அரசு நிராகரித்து விட்டது. அதன்படி, அந்த ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு மக்களுடைய உணர்வுகளை மதித்து ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், சில இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வேண்டுமென்றே அப்பாவி மக்களை தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்துகின்றனர். தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை 14 முறை மாவட்ட நிர்வாகம் போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்காததை 14-4-2018 அன்று அனைத்து செய்தித்தாள்களிலும் மாவட்ட நிர்வாகம் விளம்பரப்படுத்தியிருக்கிறது. ஆலை தற்போது இயங்கவில்லை.

பலமுறை போராட்டங்களை தூத்துக்குடி மக்கள் அறவழியில் நடத்தியிருக்கின்றனர். ஆனால், இம்முறை, சில சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக போராட்டத்தை மோசமான நிலைமைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். 144 தடை உத்தரவை மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. 144 தடை உத்தரவை மீறி மு.க.ஸ்டாலின் அங்கு சென்று வந்திருக்கிறார். அவர் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு, தடியடி நடத்தியும் மக்கள் ஒத்துழைக்காததால் வேறு வழியில்லாமல்  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அடித்தால் தடுக்கப் பார்ப்பது இயற்கையே. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை. தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், மிகுந்த வேதனையையும் துயரத்தையும் தமிழக அரசு அடைந்துள்ளது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

Related Posts