துப்பாக்கிச்சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டதாக எப்.ஐ.ஆரில் தகவல்

தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது தாங்கள் தான் என  துணை வட்டாட்சியர்களான சேகர், கண்ணன் ஆகியோர்  தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி : மே-28

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து துணை வட்டாட்சியர் சேகர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அங்கிருந்த அரசு ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாகவும் துணை வட்டாட்சியார் சேகர் கூறியுள்ளார். எனவே பொதுச் சொத்துகளை காக்க வேண்டும் என்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டதாக துணை வட்டாட்சியர் சேகர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

இதேபோல், திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து துணை வட்டாட்சியர் கண்ணன் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், திரேஸ்புரம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியை 500க்கும் மேற்பட்டோர் தாக்க முற்பட்டதாகவும், இதனை தடுக்க துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக துணை வட்டாட்சியர் கண்ணன் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையும் தற்போது வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று பல்வே யூகங்கள் எழுந்து வந்து நிலையில் துணை வட்டாட்சியர்கள் சேகர் மற்றும் கண்ணன் தாங்கள் தான் உத்தரவிட்டதாக எழுத்துப்பூர்வமாகவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts