துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற வைகோ, ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 13-பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேற்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.இதேபோல்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்னன்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அங்கு சென்றதால் அவர்கள் மீது 3 பிரிவுகளில் தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts