தூத்துக்குடியில் அசாதாரண சூழல்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் மாணவர்களின் நலன் கருதி அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்த சம்பவம் காரணமாக மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக முடியாமலும், வெளியூர் செல்ல முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், நாளை முதல் 28-ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது. நாளை முதல் 28-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஜூன் 5ம் தேதி முதல் 7ம்தேதி வரை நடைபெறும் என்றும், 29-ம் தேதியில் இருந்து அட்டவணைப்படி தேர்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மறு கூட்டலுக்கு 26-ஆம் தேதி வரையே அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், இணையதள வசதி நிறுத்தப்பட்டுள்ளதாலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts