தூத்துக்குடியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

 

 

 

தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கமாண்டோ படையினர் குவிக்கப்பட்ட நிலையில், அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்று மாவட்ட ஆட்சியர்சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர்.  மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் காவல்துறை மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் என்பவர் கொல்லப்பட்டதையடுத்து பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வசேகர் என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. இதனிடையே பதற்றம் காரணமாக 60 அதிரடிப்படை வீரர்கள் கூடுதல் பாதுகாப்புக்காக தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் அண்ணாநகர் பகுதியில் கமாண்டோ படையினர் அணிவகுப்பை நடத்தியதால் மக்களிடையே பீதி நிலவிவருகிறது. இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியில் 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டதால் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மூன்றாவது நாளாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் நிலைமை இன்னும் சற்று பதற்றமாக உள்ளது என்றும் ஒரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும் என்றும் கூறினார்.

இதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பளராக இன்று பொறுப்பேற்ற முரளி ரம்பாவும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொது மக்கள், போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Posts