தூத்துக்குடியில் படிப்படியாக இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள்

தூத்துக்குடியில் 4 நாட்களுக்குப் பிறகு, படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடி : மே – 26

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால், நாளை காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் 4 நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியதையடுத்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.  தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் நிலையில், 100 சதவீத நகர்ப்புற பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. தூத்துக்குடி முழுவதும் அனைத்து கடைகளும் 100 சதவீதம் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல், மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் இருந்து காய்கறிகள் வழக்கம்போல் வரத் தொடங்கியுள்ளதால், காமராஜர் மற்றும் வ.உ.சி. மார்க்கெட்டுகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. இதனிடையே, தூத்துக்குடி முழுவதும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், பதற்றமான பகுதிகளாக அறியப்படும் அண்ணாநகர், குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹெலிகேம் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பகுதிகளிலும், இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் சென்று மக்களை சந்திக்கவுள்ளார்.

Related Posts