தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பதால், அங்கு இயல்பு நிலை முடக்கம்

தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பதால், அங்கு இயல்பு நிலை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால், மக்களிடையே இன்னும் பீதி நிலவுகிறது.

தூத்துக்குடி : மே-25

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பாததால், 144 தடை உத்தரவு மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ள மாவட்ட நிர்வாகம், 27ஆம் தேதி காலை 8 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், நேற்று நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, இன்று வ.உ.சி சந்தையில் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி நகரில் ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் இயங்க தொடங்கியுள்ளன. அரசு மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அண்ணாநகரின் 12 தெருக்களிலும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் திரேஸ்புரம், மட்டக்கடை, போல்பேட்டை உள்ளிட்ட நகரின் மற்ற பகுதிகளிலும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், வங்கிகள், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Posts