தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி

 

 

தூத்துக்குடியில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்குழுவினர்  மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 ஆம் வகுப்பு மாணவி உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டி விரட்டி அடித்ததால் அந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தது.

தூத்துக்குடி மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நாசகார ஆலைய நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்  வாகனப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தினார்.இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் இறங்கியதால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது.போராட்டக் குழுவினர் மற்றும் கிராமமக்கள் இணைந்த மக்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்காக பொதுமக்கள் இன்று காலை முதலே ஆங்காங்கே திரண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்தார்கள். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர். அப்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு தடையையும் மீறி பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றார்கள். அதேவேளையில் வி.வி.டி. சிக்னல் அருகே போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது,காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, காவலர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையின்போது காவல்துறையின் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இந்த போராட்டங்களால் அப்பகுதி போர்க்களமாக மாறியது.

பின்னர் ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். காவல்துறை மட்டுமின்றி அரசு வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்களுக்கும், அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்ததை அடுத்து, போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவி உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்தனர். உயிரிழந்த 10 பேரில் 3 பேரின் அடையாளம் முன்னதாக தெரிய வந்தது. ஒருவர் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன்  என்பதும், மற்றொருவர் லூர்தமாள்புரம் கிளாஸ்டின் என்பதும் தெரிய வந்துள்ளது. ரயில்வே காலணி பகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். பலியானவர்கள் பற்றிய விவரம் முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜெயராமன், வெனிஸ்டா, கிளாஸ்டின்,கந்தையா, தமிழரசன், சண்முகம், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், வினிதா ஆகிய 9 பேர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் பெண்கள் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.  துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு பிறகு தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பல இடங்களில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts