தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

 

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் 57-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி, ஏப்ரல்-09

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தித் தூத்துக்குடியில் பல்வேறு போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி சில்வர்புரம், லூசியா குடியிருப்பு, மடத்தூர், முருகேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்ததால் அங்கு அ.குமரெட்டியாபுரம், சில்வர்புரம், பாலையாபுரம், லூசியா காலனி, மடத்தூர், தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், சுப்பிரமணிய புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட பொதுமக்கள் திரண்டு வந்தனர்.அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆவேசமாக கூறினர். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நான்குவழிச்சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்லாத வகையில் நடுரோட்டில் போராட்டக்காரர்கள் அமர்ந்தனர். இதனால் நெல்லை-தூத்துக்குடி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.நெல்லையில் இருந்து தூத்துக்குடி வந்த அனைத்து வாகனங்களும் கோரம்பள்ளத்திற்கு 2 கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர். அதே போல் தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற வாகனங்கள் தூத்துக்குடி நகருக்குள்ளேயே நிறுத்தப்பட்டன. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.

 

Related Posts