தூத்துக்குடி கலவரம் தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் தாக்கல்

சட்டப்பேரவையில் தூத்துக்குடி கலவரம் தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். போராட்டக்குழுவினருடன் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்ததால் பிரச்சனை ஏற்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-29

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சண்டை அணிந்து அவைக்கு வந்திருந்தனர். காலை 10 மணிக்கு அவை கூடியதும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செ.மாதவன், கே.கே.ஜி.முத்தையா, சா.கணேசன், பி.அப்பாவு, ஆர்.சாமி, ஜெ.குரு, பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேச உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து தூத்துக்குடி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததால், தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளிக்கு இடையே தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடியில் கடந்த 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர், திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார். அப்போது, சில அமைப்புகளும், கட்சிகளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக முதலமைச்சர் கூறியுள்ளார். வன்முறையை முறியடிக்க கண்ணீர் புகைக் குண்டு மற்றும் தடியடி நடத்தப்பட்டது என்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், போராட்டக்காரர்களை அடக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவே போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Related Posts