தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : மே-23

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அம்மாவட்டத்தில் 25-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அனைத்து தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசம்பவத்தால் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி நிலவரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் ஜெயக்குமார்,தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தலைவராகக் கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

Related Posts