தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்

தூத்துக்குடி : மே-29

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்ற கேள்விக்கு ஒரு வாரத்துக்கு பிறகு முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, வன்முறை தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில், 12 பிரிவுகளின் கீழ், 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், தூத்துக்குடி தனி வட்டாட்சியர் சேகர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் உத்தரவின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை தூத்துக்குடி சிப்காட் மற்றும் வடபாகம் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts