தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்

ஸ்டெர்லைட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை : மே-30

தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர நேற்று திமுகவினருக்கு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். மேலும் துப்பாக்கிச் சூட்டை தொடர்புபடுத்தி மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. இதையடுத்து தி.மு.க.வினர் அவையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர். மேலும், சட்டசபை கூட்டத்தில் தி.மு.இனி பங்கேற்காது என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. சார்பில் மாதிரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை ஏற்படுத்திக் கொண்டு, சட்டப்பேரவையில் நிகழும் அலுவல்களை நடத்தினர். மாதிரி சட்டப்பேரவை கூட்ட சபாநாயகராக சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டு, சட்டப்பேரவை நிகழ்வுகளை நடத்தினார். அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். இதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்,  ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

இந்தக் கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சபாநாயகரும், உறுப்பினர்களும் நடந்துகொள்ளும் முறை, பேச அனுமதிக்கப்பட்டவரை குறுக்கிட்டுப் பேசாதிருத்தல், அவருக்கு நாகரிகமாக பதிலளித்தல் உள்ளிட்ட விதிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தக் கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts