தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணை

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி : மே-31

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை தூத்துக்குடி சிப்காட் மற்றும் வடபாகம் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து, கடந்த 28 ஆம் தேதி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்நிலையில், சிபிசிஐடி டி.எஸ்.பி. பிரவீன்குமார் மேற்பார்வையில் 20 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் தூத்துக்குடியில் இன்று விசாரணையை தொடங்கினர். தென்பாகம், வடபாகம், சிப்காட் காவல்நிலையங்களில் வழக்குகள் தொடர்பான கோப்புகளை பெற்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணைய குழு இன்று தமிழகம் வரவுள்ளது. இன்று மாலை தூத்துக்குடி செல்லும் குழுவினர், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினரையும், தனிநபர் சாட்சிகளையும் நேரில் சந்தித்து விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts