தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவது சரியாக இருக்கும்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவது சரியாக இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி : ஜூன்-18

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த மாதம் 22 ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? எத்தனை பேர் உண்மையில் உயிரிழந்தனர்? என்ற விவரத்தை வெளியிடவும், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியிருந்தார். மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர் குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் ரஜினிகாந்த் கூறிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக, சிபிஐ விசாரணை சரியானதாக இருக்கும் என கருத்து தெரிவித்தது. மேலும் சிறப்பு விசாரணை குழு கோரிய மனுவிற்கு தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Posts