தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு வைகோ ஆறுதல்

தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி : மே-23

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி துாத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது வன்முறை ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், சகாயபுரத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி வெணிஸ்டா உட்பட 12 பேர் உயிரிழந்jனர். தகவல் அறிந்து வெனிஸ்டா, ஜான்சி ஆகியோரின் வீட்டிற்கு நேரில் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவர்களுக்கு படங்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, துப்பாக்கிச்சூட்டில் மக்கள் பலியான நிலையில் கூட, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். காவலர் உடையில் இல்லாமல், பொதுமக்கள் போல் உடையணிந்து கொண்டு காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதை வன்மையாக கண்டித்த வைகோ, ஆட்சியர் அலுவலகப் பகுதியில் மட்டுமின்றி, தூத்துக்குடி மாநகரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் படுகாயமடைந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்தது என்ன, காவல்துறையினர் செயல்பாடு குறித்து அவர்களிடம் வைகோ கேட்டறிந்தார். மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உறவினர்களை சந்தித்த வைகோ, கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று தூத்துக்குடியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக குற்றம்சாட்டினர். இதற்கு காரணமானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Posts